ஹைதராபாத்: தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர்களில் பங்கேற்று வருகிறது. முன்னதாக, மூன்று டி20 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. அதில், ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது.
அதனை அடுத்து, டிசம்பர் 17ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் தொடங்கியது. அதில், முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 116 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் நேற்று (டிச.19) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியை 211 ரன்களில் சுருட்டிய தென் ஆப்ரிக்க அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி, நாளை (டிச.21) தென் ஆப்பிரிக்காவின் பார்ல் எனும் பகுதியில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் நிலையில் உள்ளது.