உங்களுக்கு விருப்பமான கிரிக்கெட் பிளேயர் யார் என்று கேட்டால், சச்சின், தோனி, சேவாக், கோலி என கூறிவந்த இளைஞர்கள் மத்தியில், சமீப காலங்களில் மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா என பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன. மிதாலி ராஜ் 20 வருடமாக கிரிக்கெட் விளையாடுவதால் அவர் பெயர் அடிபடுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், யார் இந்த ஸ்மிருதி மந்தனா?...
கிரிக்கெட் ஆர்வமும், அறிமுகமும்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மிருதிக்கு, அவருடைய அண்ணனிடம் இருந்து கிரிக்கெட் ஆர்வம் தொற்றியுள்ளது. அவரின் ஒன்பது வயதில், 15 வயதுக்குட்பட்டோருக்கான மகாராஷ்டிரா அணியிலும், அவரின் 11ஆவது வயதில், 19 வயதுக்குட்பட்டோருக்கான மகாராஷ்டிரா அணியிலும் ஸ்மிருதி விளையாட ஆரம்பித்தார்.
தன்னுடைய 17ஆவது வயதில் மேற்கு மண்டலத்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில், குஜராத் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடிக்க, அது அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. உள்ளூர் தொடர்களின் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் அவர் வங்கேசத்திற்கு எதிரான தொடர் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமானார். 2014ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
விருதுகள்
2016இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து, சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதே ஆண்டு ஐசிசியின் சிறந்த டி20 அணியில் இடம்பிடித்து, அதில் இடம்பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் ஓடிஐ உலகக்கோப்பையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முக்கிய காரணம், ஸ்மிருதி. 2018இன் சிறந்த பெண் கிரிக்கெட்டர், ஒருநாள் போட்டி சிறந்த வீராங்கனை என்ற இரு விருதுகளையும் வென்றார்.
2019ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக ஸ்மிருதி தேர்ந்தெடுக்கப்பட, அவர் இந்திய பெண்கள் அணியின் மிக இளமையான கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். பெண்கள் ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை (51 இன்னிங்ஸ்) கடந்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதுவரை...
ஸ்மிருதி, இதுவரை 81 டி20 போட்டிகளில் விளையாடி 13 அரைசதங்கள் உள்பட 1,901 ரன்களும், 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உள்பட 2,253 ரன்களும், 3 டெஸ்ட் போட்டிகளில் 167 ரன்களும் குவித்துள்ளார். சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி முதல்தர போட்டிகள், உள்ளூர் தொடர்களிலும் ஸ்மிருதி விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா உள்ளூர் டி20 தொடரான மகளிர் பிக்பாஷ் கிரிக்கெட்டில் 25 போட்டிகள் விளையாடி 407 ரன்களையும் குவித்துள்ளார்.
ஆண்கள் மயமான கிரிக்கெட்டில் பெண்கள் மீதும் தற்போது வெளிச்சம் பட்டுள்ளதற்கு முக்கியமானவர்களில் ஸ்மிருதியும் ஒருவர். 24 வயது நிறைவடைந்திருக்கும் ஸ்மிருதி மந்தனா பெண்கள் கிரிக்கெட்டின் நீங்கா நட்சத்திரம்.
இதையும் படிங்க: மிடில் ஆர்டரின் சிறந்த பேட்ஸ்மேன் ஹர்திக் - ரஸ்ஸல் அர்னால்டு