ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் காபூல் பிரிமியர் லீக் டி-20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 29) நடைபெற்ற ஆட்டத்தில் ஷகீன் ஹண்டர்ஸ் மற்றும் அபாசின் டிஃபெண்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி ஆப்கானிஸ்தானில் அயோபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஷகீன் ஹண்டர்ஸ் அணியின் தொடக்க விரர்கள் ஆடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். அதன் பின் மிடில் ஆடரில் களம் புகுந்த சித்திக்குல்லா அடல் பந்துகளை நாலா பக்கமும் சிதறடித்தார். சித்திக்குல்லா அடல் பேட் செய்த போது அமீர் சசாய் 19 வது ஓவர் வீச வந்தார். முதல் பந்தை அமீர் சசாய் வீச அதை சிக்சருக்கு பறக்கவிட்டார். அந்த பந்து நோ பால் ஆக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 7 ரன்கள் கிடைத்தது. அதன் பின் அகல பந்து வீசி பவுண்டரிக்கு சென்றதால் 5 ரன்கள் கிடைத்தது.
அதனை அடுத்து வீசிய ஆறு பந்துகளையும் சித்திக்குல்லா அடல் சிக்சருக்கு விளாசி மிரட்டினார். அமீர் சசாய் வீசிய அந்த ஓவரில் மட்டும் 48 ரன்கள் ஷகீன் ஹண்டர்ஸ் அணிக்கு கிடைத்தது. இவர் மட்டும் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் உட்பட 118 ரன்கள் எடுத்து அசத்தினார். ஷகீன் ஹண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.