சென்னை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்று தகுதி பெறும்.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் 10 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட 10 நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் 5 லீக் ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா - ஆஸ்திரேலியா லீக் ஆட்டத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடு விதித்து உள்ளனர்.
ஆட்டத்தை காண வரும் பார்வையாளர்கள் 2 கட்ட சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்து உள்ளது. மேலும், பார்வையாளர்கள் வேறேதும் அசம்பாவிதங்களில் ஈடுபடாமல் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பு சோதனைக்காகவும் 300 தனியார் பாதுகாப்பு பணியாளர்களை பயன்படுத்த சென்னை போலீசார் முடிவு எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.