லக்னோ: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 29வது லீக் ஆட்டம் லக்னோ ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர்.
இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களம் வந்த விராட் கோலியும் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடந்து ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் நிதாமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த இந்த கூட்டணி அணி 131 ரன்கள் எடுத்த போது பிரிந்தது. கே.எல்.ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 87 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில், இந்த போட்டியின் மூலம் ரோகித் சர்மா சர்வதேச கிரிகெட்டில் 18 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் 18 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளனர். 257 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 10 ஆயிரத்து 510 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் 148 டி20 போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 853 ரன்களும், 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 677 ரன்களும் ரோகித் சர்மா எடுத்துள்ளார்.
இதையும் படிங்க:Rohit Sharma: இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டியில் களம் இறங்கிய ரோகித் சர்மா!