சென்னை: உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023, வருகிற 5ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.
இது தொடர்பாக ரோகித் சர்மாவின் குழந்தைப்பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறுகையில், “சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை மற்றும் இதர சில ஆட்டங்களில் ரோகித் சர்மாவின் விளையாட்டுத் திறன், கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வதற்கு உதவியாக இருக்கும். ரோகித், கேட்ச் பிடிப்பதைப் பார்த்தே, அவரது உடல் திறன் எந்த அளவு வலிமையாக உள்ளது என்பதை அறிய முடியும். எனவே, அவரது உடல் திறன் பற்றி கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் சமநிலையில் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். காயம் அடைந்த பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய ஜஸ்பிரிட் பும்ராவின் பவுலிங், முன்பை விட மிகவும் வலிமையாக உள்ளது. பெரும்பாலான ஆல்-ரவுண்டர்ஸ் அணியில் உள்ளனர். நிச்சயமாக இந்தியா, உலகக் கோப்பை போட்டியில் சிறந்த மற்றும் வலிமைமிக்க போட்டியாளராக இருக்கிறது.