இந்தூர்: இந்திய அணி அப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று (ஜன.14) 2வது டி20 போட்டி விளையாடியது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து அந்த இலக்கை துரத்திய இந்திய அணி 15.4 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் தன்வசம் ஆகியது.
இந்த நிலையில், இந்த போட்டியில் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா கோல்டன் டக் ஆனார். இருப்பினும் அவர் இந்த போட்டியின் மூலம் ஒரு மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி ரோகித் 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். உலகக் கிரிக்கெட் விளையாட்டில் எந்த ஒரு வீரரும் இந்த சாதனையைப் படைத்தது கிடையாது.
இவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் மற்றும் டோக்ரெல் முறையே 134, 128 போட்டிகளிலும், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 124, நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் 122 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.