மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததோடு, கேப் டவுன் மைதானத்தில் வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது.
இந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை இந்திய அணி சமன் செய்ததை தொடர்ந்து, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. தோனிக்கு பின்பு தென் ஆப்பிரிக்காவில் ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், இந்திய அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது.
இவ்விரு அணிக்களுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் வரும் 11, 14 மற்றும் 17ஆம் தேதிகளில் மொகாலி, இந்தூர் மற்றும் பெங்களூருவில் நடைபெற உள்ளன. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு இன்று (ஜன.05) தேர்வுக்குழு கூடுகிறது. காணொலி மூலம் கூடும் இந்த குழுவில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கார், சலில் அன்கோலா, ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதா பானர்ஜி மற்றும் எஸ் ஷரத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.