சிமோகா: பிசிசியின் 19 வயதுக்குப்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபி 2023-24 சீசன் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தொடரில் கர்நாடகா அணி தமிழ்நாட்டை வீழ்த்தியும், மும்பை அணி உத்திர பிரதேசத்தை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த இறுதிப் போட்டியானது கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஜன.12ஆம் தேதி சிமோகாவின் கேஎஸ்சிஏ நாவுலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய மும்பை அணி 113.5 ஓவர்களில் 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரரான ஆயுஷ் மத்ரே 180 பந்துகளில் 145 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடகா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 223 ஓவர்களை சந்தித்த கர்நாடகா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 890 ரன்கள் குவித்தது. போட்டியின் நாட்கள் முடிவடைந்ததால், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கர்நாடகா அணி 2023-24 19 வயதுக்குப்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபியை வென்றது.