அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி நாக் -அவுட் சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (அக். 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 24 மணி நேரம் கூட இல்லாத இந்த இறுதிப் போட்டியை காண கோடிக்கணக்கான இதயங்கள் துடித்துக் கொண்டு இருக்கின்றன.
லீக் மற்றும் நாக் அவுட் என விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, நாளை (நவ. 19) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதேபோல் லீக் ஆட்டங்களில் இரண்டு தோல்விகளுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அதன்பின் சுதாரித்துக் கொண்டு வீறுநடை போட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தை எதிர்கொள்கிறது. போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான சவாலை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய அணியில் முகமது ஷமி அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் அவர் இறுதிப் போட்டியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் கூறினார். தொடர்ந்து, உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை விளையாடி வருகிறது என்றார்.
நிச்சயம் இந்திய வீரர்களுக்கு எதிராக நாங்கள் களமிறங்குவது சிறந்த போட்டியாக இருக்கும். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோரின் தொடக்கம் எங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அரையிறுதியை போல் மீண்டும் ஒருமுறை இந்திய அணியால் என்ன தாக்கத்தை கொடுத்தால், என்ன நடக்கும் என்பது தெரியும் என்று பேட் கம்மின்ஸ் கூறினார்.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகிய இருவரும் முக்கியமான போட்டிகளில் விளையாடி உள்ளதாகவும் அதனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றும் கம்மின்ஸ் கூறினார். அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிதாக நிறைவான வெற்றியை பெறவில்லை என்று கூறினார்.
ஒவ்வொரு போட்டியிலும் கடினமான சூழலில் சிக்கிக் கொண்டு, கடைசி கட்டத்தில் வெற்றிபெறுவதற்கான வழியை கண்டறிந்து வென்றுள்ளோம். என்றும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு வீரர் முன் நின்று வழிநடத்தி இருக்கிறார் என்றார். அதனால் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக கம்மின்ஸ் தெரிவித்தார்.
லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரு தலை பட்சமாக இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பார்கள். அப்படியான கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்தியான வேலை வேறு எதுவும் கிடையாது என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்தார். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா குல்திப் யாதவ் உள்ளிட்டோரின் ஆட்டமும் சிறந்த வகையில் உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடும் சவால் அளிக்கக் கூடிய வகையில் விளையாடுவார்கள் என்பதால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பேட் கம்மின்ஸ் கூறினார்.
இதையும் படிங்க :Ind Vs Aus : "2011 சச்சினுக்காக... 2023 டிராவிட்டுக்காக".. "உலக கோப்பை வெல்வது மகிழ்ச்சியான தருணம்" - ரோகித் சர்மா!