துபாய் :19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் ருத்ர பட்டேலின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில், அவரை ஏளனம் செய்வது போன்று பாகிஸ்தான் வீரர் முகமது ஜீசானின் செயல்பட்டது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (டிச. 10) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் 62 ரன்னும், கேப்டன் உதய் சர்மா 60 ரன்களும், சச்சின் தாஸ் 58 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை ஆட்டமிழந்து வெளியேறினர்.
மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய ருத்ர பட்டேலுக்கு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீசானின் பந்துவீசினார். 12வது ஓவரின் இரண்டாவது பந்தை வீசிய போது, பந்து ருத்ர பட்டேல் பேட்டின் முனையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச்சானது. விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஜீசான், காற்றில் தனது கைகளை கொண்டு குத்துவது போல் ருத்ர பட்டேலை நோக்கி செய்தார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்திய வீரரை ஏளனப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பந்துவீச்சாளரின் செயல் இருந்ததாக நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசிய முகமது ஜீசான் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னதாக கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இந்திய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி நேபாளத்தை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க :Ind Vs SA : மழை காரணமாக டாஸ் தாமதம்!