ஹைதராபாத்: உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 13-வது எடிஷன் வரும் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் நேரடியாகத் தேர்வான நிலையில், அதன் பிறகு தகுதி சுற்று மூலம் இலங்கை மற்றும் நெதர்லாந்து தேர்வானது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடக்கிறது. ஆனால் அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி திருவிழா துவங்குவதால், இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அக்டோபர் 14ம் தேதி மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. பொதுவாக இந்தியா விளையாடுகிறது என்றாலே ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் இந்தியா பாகிஸ்தான் போட்டி எதிர்கொள்கிறது.
அதனால் வழக்கத்தை விட அதிகமாக ரசிகர்களின் வருகை இருக்கும். அதனால் அக்டோபர் 15ம் தேதி போட்டியானது நடத்தப்பட்டால் நெருக்கடி அதிகமாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், போட்டி இறுதி அட்டவணை வெளியான பின்பே டிக்கெட் விற்பனைக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூட்டிய அவரசக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.