மும்பை: ஆஸ்திரேலியா மகளிர் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது. இதில் 1 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முடிவடைந்துள்ள நிலையில், இத்தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இத்தொடரின் 3வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 338 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் கேப்டன் அலிசா ஹீலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் விளாசி 119 ரன்கள் குவிக்க, அலிசா ஹீலி 82 ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனைகளில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 30, சதர்லேண்ட் 23, அலனா கிங் 26 ரன்கள் எடுத்தனர்.
இந்தியச் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்களும், அமன்ஜோத் கவுர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.