சென்னை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வெல்வது அவ்வளவு எளிதல்ல என்றும் கடுமையான சவாலாக இந்திய அணி இருக்கும் என நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நியூசிலாந்து அணி தான் விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது.
அகமதாபாத், ஐதராபாத், சென்னை என மூன்று மைதானங்களில் விளையாடி உள்ள நியூசிலாந்து அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை வரும் 21ஆம் தேதி தர்மசாலாவில் எதிர்கொள்கிறது. தர்மசாலாவில் நிலவும் சூழலுக்கு ஏற்ப விளையாடி இந்திய அணியை வெல்வது என்பது நியூசிலாந்து அணிக்கு சாதாரண விஷயம் அல்ல.
நடப்பு தொடரில் இந்திய அணியை எதிர்கொள்வது என்பது எளிதானது அல்ல என நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்து உள்ளார். வரும் 21ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட நியூசிலாந்து வீரர்கள் தர்மசாலா பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவரது விக்கெட் நியூசிலாந்துக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என்றும் சான்ட்னர் தெரிவித்து உள்ளார்.