பெங்களூரு : முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நெதர்லாந்து வீரர் ரியன் க்ளின் அணியில் இருந்து விலகி உள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியானுக்கு பதிலாக நோவா க்ரோசுடன் களமிறங்க உள்ளதாக நெதர்லாந்து அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து உள்ளன.
4வது இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் வரும் நவம்பர் 12ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அன்றைய ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நெதர்லாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும் என்பதால் அன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், காயம் காரணமாக நெதர்லாந்து அணியில் இருந்து வீரர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ரியான் க்ளின் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக நோவா க்ரோஸ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக நெதர்லாந்து அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. நோவா க்ரோஸ் இதுவரை நெதர்லாந்து அணிக்காக ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடி உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று தொடரில் நெதர்லாந்து அணிக்காக நோவா க்ரோஸ் விளையாடி உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய அவர், 7 ரன்கள் எடுத்தார். காயம் காரணமாக விலகிய ரியன் க்ளின் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் விளையாடி 7 ஓவர்கள் மட்டும் பந்துவீசினார்.
அரைஇறுதி வாய்ப்பு இழந்துவிட்டாலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால், தரவரிசையில் முன்னிலை பெற்று 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெறும். அதனால் வெற்றிக்காக நெதர்லாந்து அணி கடுமையாக போராடும். அதேநேரம், நெதர்லாந்தை வீழ்த்தி நடப்பு சீசனில் லீக் சுற்றில் தோல்வியே பெறாத அணி என்ற சிறப்பை பெற இந்திய அணியும் போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணியின் உத்தேச ஆடும் லெவன் : ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீடே, விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், நோவா குரோஸ், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்பிகார், அஹ்மத் மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.
இதையும் படிங்க :Sri Lanka VS New Zealand : 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை திணறல்!