டெல்லி: இந்த நாளில்தான், அதாவது 2007ஆம் ஆண்டில் கேப்டனாக தனது பயணத்தைத் தொடங்கினார் எம்.எஸ்.தோனி. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்தான் அவர் இந்திய அணியை முதல் முறையாக வழி நடத்தினார். அப்போது தொடங்கி அவர் ஒரு பெரும் சகாப்தத்தையே நிகழ்த்திய அவரது கேப்டன்சியை பற்றிதான் இந்த தொகுப்பு.
2007ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி களம் இறங்கியது. இந்த ஆட்டம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஹாலிவுட் பெட்ஸ் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற போட்டி. அதிலும், மிகவும் சுவாரசியமானது. ஆட்டம் டிரா ஆனதால் Bowl out முறைக்குச் சென்றது. பவுல் அவுட் என்பது தலா 5 முறை இரு அணிகளும் பந்து வீச வேண்டும். அதில் அதிக முறை ஸ்டம்ப்புக்கு பந்து வீசும் அணி வெற்றி பெறும்.
இதில் பகுதி நேர பவுலரான வீரேந்தர் சேவாக் மற்றும் ராபின் உத்தப்பா அருமையாக பந்துகளை வீசி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். பாகிஸ்தான் தனது அணியை பவுல் அவுட்டுக்கு தயார்ப்படுத்தாத நிலையில், எம்.எஸ்.தோனி இந்திய அணியை சிறப்பாக தயார்படுத்தி இருந்தார். தனது கேப்டன்சியை சிறப்பாக தொடங்கிய தோனி, முதல் டி20 உலக கோப்பையிலேயே இந்திய அணியை மகுடம் சூட வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் அவர் 2007 காலகட்டத்திலேயே 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை மனதில் கொண்டு திட்டமிட தொடங்கினார். தொடர்ந்து இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய அவர், அணிக்கு யார் தேவை, யார் தேவையில்லை, யாரை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு அதை செயல்படுத்தினார்.
2011ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக ஒரு பக்கம் சேவாக், அதன் பின் சச்சின் என நம்பிக்கை நட்சத்திரங்கள் வெளியேற, காம்பீர் மட்டுமே சிறப்பாக ஆடி வந்தார். அவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய தோனி அவருக்கே உண்டான பானியில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடிவித்து வைத்து, சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்று தந்தார்.
ஐசிசி உலகக் கோப்பையை பெரிதும் ருசிக்காத இந்தியாவுக்கு, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என தொடர்ச்சியாக இந்திய அணிக்கு ஐசிசி கோப்பைகளை அள்ளித் தந்தார். அவர் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 60 போட்டிகளில் இருந்துள்ளார். அதில் 27 வெற்றிகளும், 18 தோல்விகளும், 15 டிராகளும் ஆகும். இதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் தோனி வழிநடத்தி உள்ளார். அதில் 110 வெற்றிகளை குவித்துள்ளார்.