டப்ளின் (அயர்லாந்து):ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட அயர்லாந்து சென்றுள்ளது. முன்னாள் இந்திய வீரர் லட்சுமணன் இந்த அணிக்கு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி டப்ளின் நகரின் மலாஹிட் மைதானத்தில் நேற்று (ஜுன் 26) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், மழை குறுக்கிட்டது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, தொடர் மழையினால் இரவு 11 மணியளவில் தொடங்கியது.
4 ஓவர் பவர்பிளே:ஆட்டம் 12 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. பவர்பிளே நான்கு ஓவர்கள் எனவும், அதிகபட்சமாக இரண்டு பந்துவீச்சாளர்கள் மூன்று ஓவர்களை வீசிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பால் ஸ்டெர்லிங், கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர்.
இதில், புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரிலேயே கேப்டன் ஆண்ட்ரூ டக்-அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து, அதிரடி வீரர் பால் ஸ்டெர்லிங் 4 (5) ரன்களுக்கும், கரேத் டெலானி 8 (9) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
50 ரன்கள் பார்ட்னர்ஷிப்:ஹாரி டெக்டர் - டக்கர் ஜோடி நிலைத்து நின்று ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டக்கர் 18 (16) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து, டெக்டர் ரன்களை குவிக்க அயர்லாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக டெக்டர், 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 64 (33) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சு தரப்பில் புவனேஷ்வர், ஹர்திக் பாண்டியா, ஆவேஷ் கான், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.