ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ள ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களான ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளனர்.
இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில், "ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொந்த கரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்புகின்றனர். வரும் ஐபிஎல்லில் இவர்கள் விளையாட மாட்டார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அவர்களின் முடிவை மதிக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்" என ட்வீட் செய்துள்ளது.
ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் லெக் ஸ்பின்னர் ஜாம்பாவை ரூ.1.5 கோடிக்கும் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சனை ரூ.4 கோடிக்கும் ஆர்சிபி அணி வாங்கியது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆஸ்திரேலியே வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கரோனாவைக் கண்டு இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து ஆஸ்திரேலியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.