ஹைதராபாத்: 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், 'ஹிட் மேன்' என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டு பிளெஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தாலும், கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விளைவு... புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது. 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அந்த அணி 10 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இதனால் இந்த முறை வெற்றிப் பாதைக்கு திரும்ப, மும்பை அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் வீரர்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே, மும்பை அணி வெற்றி பெற முடியும்.
கட்டாயத்தில் சூர்யகுமார்: கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன் ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். எனினும், அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களிலும், சூர்யகுமார் யாதவ் "கோல்டன் டக் அவுட்" ஆனதால் பெரும் விமர்சனங்களுக்கு ஆளானார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதேபோல், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சந்தீப் வாரியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பெற்றிருப்பது அணிக்கு கூடுதல் பலம். ஜேசன் பெஹ்ரன்டார்ஃப், குமார் கார்த்திகேயா ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசினால் பெங்களூரு அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
பெங்களூரு அணி எப்படி?:பெங்களூரு அணியைப் பொறுத்தவரை, கடந்த 3 தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், இதுவரை ஒருமுறை கூட அந்த அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றவில்லை என்பதால், இந்த முறை கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் களம் இறங்கும் என நம்பலாம். விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல், பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகிய அதிரடி வீரர்கள் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ளனர்.
காயத்தால் அவதி: எனினும், காயம் காரணமாக ராஜட் படிடார், ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் ஆகியோர் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. ஏப்ரல் 13ஆம் தேதி ஹேசில்வுட் அணிக்குத் திரும்புவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. படிடார் இன்னும் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. இலங்கை வீரர் ஹசரங்கா சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால், தொடரின் பிற்பகுதி ஆட்டங்களில் அவர் விளையாடுவார் என ஆர்சிபி அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.