சென்னை:16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 24) நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி, தொடரை விட்டு வெளியேறும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் வரிந்துகட்டும்.
நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 6 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 16 புள்ளிகளை (நிகர ரன் ரேட் -0.044) பெற்றுள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மிரட்டும் மிடில் ஆர்டர்: பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இஷான் கிஷன் ஒருசில ஆட்டங்களில் விரைவில் விக்கெட்டை இழப்பது மும்பை அணிக்கு மைனஸ். எனினும் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், டிம் டேவிட் வலுசேர்க்கின்றனர். குறிப்பாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கேமரூன் க்ரீன் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.
பந்துவீச்சில் மத்வால், பெஹ்ரென்டார்ஃப் தங்கள் பணிகளை சிறப்பாக செய்கின்றனர். கிறிஸ் ஜோர்டன் சிறிது ஏமாற்றம் அளிக்கிறார். சுழற்பந்து வீச்சில் அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா கைகொடுக்கிறார். குமார் கார்த்திகேயாவின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஒட்டுமொத்த அணியும் முழு பங்களிப்பை அளித்தால் தான் லக்னோ அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
லக்னோ எப்படி?: நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடிள்ள லக்னோ அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 17 புள்ளிகளை (நிகர ரன் ரேட் 0.284) பெற்று 3வது இடத்தில் உள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு லக்னோ அணி முன்னேறியது. குயின்டான் டி காக், ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டக் கூடியவர்கள். இவர்கள் 3 பேரையும் கட்டுப்படுத்த வேண்டியது மும்பை பந்துவீச்சாளர்களுக்கு முக்கிய சவாலாக இருக்கும். மன்கட், ஆயுஷ் படோனி நிலைத்து நின்று ஆடுவது அவசியம்.