சென்னை: 14ஆவது ஐபிஎல் போட்டிகளின் மூன்றாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
SRH vs KKR IPL 2021; 10 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வி!
22:57 April 11
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வியை தழுவியது.
முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிதிஷ் ராணா 56 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார்.
அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ஒன்பது பந்துகள் மட்டுமே சந்தித்த தினேஷ் கார்த்திக் கடைசி வரை அவுட் ஆகாமல் 22 ரன்கள் சேர்த்தார். இவர்களின் ஆட்டத்தால், கொல்கத்தா அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது.
அடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் மணீஷ் பாண்டே, ஜானி பேர்ய்ஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முறையே 61 மற்றும் 55 ரன்கள் எடுத்தனர். அதிலும் மணீஷ் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். எனினும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. விருத்திமான் சஹா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் 7, 3 ரன்களில் அவுட் ஆனார்கள்.
இந்நிலையில் கடைசி ஒரு ஒவரில் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் ஹைதராபாத் அணியால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. நிதிஷ் ராணா ஆட்ட நாயகன் விருதைச் தட்டிச் சென்றார்.