ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று, 8வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அந்த அணி 16 புள்ளிகளை பெற முடியும்.
ஜேசன் ராய்க்கு வாய்ப்பு: இன்றைய போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணி சில வியூகங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஜெகதீசன் மற்றும் குர்பாஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அந்த போட்டியில் குர்பாஸ் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். ஆனாலும் ஷர்துல் தாகூர், ஜெகதீசன் ஆகியோர் ஏமாற்றினர். எனவே கடந்த போட்டியில் பங்கேற்காத அதிரடி வீரர் ஜேசன் ராய், இன்றைய போட்டியில் களம் இறங்க வாய்ப்புள்ளது. லிட்டன் தாசுக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜான்சன் சார்லஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மிடில் ஆர்டரில் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் நிலைத்து நின்றால் மட்டுமே ரன் குவிக்க முடியும். ரசல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சல் நம்பிக்கை அளிக்கிறார். சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி தருகிறார். காயம் காரணமாக இன்றைய போட்டியில், உமேஷ் யாதவ் பங்கேற்க வாய்ப்பில்லை.
மிடில் ஆர்டர் பலவீனம்:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை 8 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்க உள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய ஹாரி ப்ரூக், அதன்பிறகு பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரைசதம் விளாசினார். எனினும் மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, கேப்டன் மார்க்ரம் விக்கெட்டை விரைவில் பறிகொடுப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு மைனஸ். எனினும் விக்கெட் கீப்பர் கிளாசென், அப்துல் சமத் ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.