துபாய்: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் இன்று முதல் தொடங்கின. 14ஆவது சீசனின் 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.
அதன்படி சென்னை அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைக் குவித்தது.
அதிகபட்சமாக ருதுராஜ் 88 (58), ஜடேஜா 26 (33), பிராவோ 23 (8) ரன்கள் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் போல்ட், மில்னே, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 157 என்ற இலக்கை துரத்திய மும்பை அணிக்கு டி காக், அன்மோல்பிரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக இறங்கினர்.
பவர்பிளே பிளேயரான டி காக் முதலில் சற்று அதிரடி காட்டினார். இருப்பினும், தீபக் சஹாரின் பந்துவீச்சில் டி காக் 17 ரன்களிலும், அன்மோல்பிரீத் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதையடுத்து, களமிறங்கிய சூர்யகுமார், இஷான் கிஷன், பொல்லார்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.