தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

RR vs PBKS:''மல்லுக்கட்டும் இரு அணிகள்": அதிக ரன்களை குவிக்கப் போவது யார்? - ராஜஸ்தான் பஞ்சாப் ஐபிஎல் ஆட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் களம் இறங்க உள்ளன. சம பலம் வாய்ந்த அணிகள் மோத உள்ள நிலையில், வெற்றி வாய்ப்பு குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

Today IPL MATCH
இன்றைய ஐபிஎல் போட்டி

By

Published : Apr 5, 2023, 2:32 PM IST

Updated : Apr 5, 2023, 3:35 PM IST

ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில், இன்று (ஏப்ரல் 5) சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் வீழ்ந்தது. எனினும் நடப்பு சீசனில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மிரட்டும் ராஜஸ்தான்: தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான், 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கை பொறுத்தவரை ராஜஸ்தான் அணி வலிமையாகவே உள்ளது. ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர் என அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பட்லர், சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதம் அடித்து மிரட்டினர்.

பந்துவீச்சிலும் அந்த அணி பலமாகவே பார்க்கப்படுகிறது. ஜேசன் ஹோல்டர், அஸ்வின், ட்ரென்ட் போல்ட், சாஹல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பிளஸ். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சாஹல் 4 விக்கெட்கள், போல்ட் மெய்டன் ஓவருடன் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் கணிசமான ரன்களை குவித்தால், பஞ்சாப் அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கலாம். போட்டி நடைபெறும் அசாம் மாநிலம் கவுகாத்தி, ஆல் ரவுண்டர் ரியான் பராக்கின் சொந்த ஊர் என்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. கவுகாத்தியில் ஆட்டம் நடைபெற்றாலும், ராஜஸ்தான் அணிக்கு உள்ளூர் ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது.

'டஃப்' கொடுக்கும் பஞ்சாப்:இந்நிலையில், ராஜஸ்தான் அணிக்கு சற்றும் சளைக்காதது போல், பஞ்சாப் அணியும் சமபலம் வாய்ந்த அணியாகவே பார்க்கப்படுகிறது. தனது முதல் போட்டியில் மழை பாதிப்புக்கு இடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் தவான் 40, ராஜபக்சே 50 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு உதவினர். ஷிகர் தவான், பனுகா ராஜபக்சே, சிக்கந்தர் ராசா, சாம் கர்ரன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் கணிசமான ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ரிஷி தவான் ஆகியோரின் பந்துவீச்சும் நம்பிக்கை அளிக்கிறது.

வருகிறார் ரபாடா?: பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டோன் உடற்தகுதி சான்றுக்காக காத்திருக்கிறார். அதனால் இன்னும் அவர் இந்தியாவுக்கு வராததால், இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. ஆல்ரவுண்டரான லிவிங்ஸ்டோன் இல்லாதது பஞ்சாப் அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதே நேரம், நெதர்லாந்து அணியுடனான போட்டிகளை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ள தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடா, பஞ்சாப் அணியுடன் இணைந்துள்ளார். ஆனால் அவர் இன்றைய போட்டியில் களம் இறங்குவாரா என அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஒருவேளை ரபாடா ஆடும் லெவனில் இடம்பெற்றால், இன்றைய போட்டியில் நேதன் எல்லிசுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் ஓபட் மெக்காய், காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் அவர் எப்போது அணியில் இணைவார் என தெரியவில்லை.

ஆட்டம் எங்கே?:ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் 8வது லீக் ஆட்டம், இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் பர்சபாரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

நேருக்கு நேர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இதில் ராஜஸ்தான் 14 போட்டிகளிலும், பஞ்சாப் 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ராஜஸ்தான் உத்தேச அணி விவரம்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், அஸ்வின், போல்ட், ஆசிப், சாஹல்.

பஞ்சாப் உத்தேச அணி விவரம்: பிராப்சிம்ரன் சிங், தவான் (கேப்டன்), பனுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராசா, சாம் கர்ரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ரபாடா.

Last Updated : Apr 5, 2023, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details