நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்று (ஏப்ரல் 17) நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில், 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. அடுத்த வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் இரண்டு அணிகளும் மல்லுக்கட்டுகின்றன. டெல்லி அணியுடன் நடைபெற்ற கடந்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
மிரட்டும் ராயல் சேலஞ்சர்ஸ்:இன்றைய ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். நடப்பு சீசனில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டங்களில் மும்பை, டெல்லி அணிகளை பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. எனினும் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி, கேப்டன் டு பிளெஸ்ஸி, லோம்ரோர், மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள்.
சபாஸ் அகமது, அர்ஜூன் ராவத் ஆகியோரும் கணிசமான ரன்களை குவித்தால், சென்னை அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். எனினும், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஃபார்மை இழந்து தவித்து வருகிறார். 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பந்துவீச்சை பொறுத்தவரை ஹர்ஷல் படேல், ஹசரங்கா, பேர்னல், முகமது சிராஜ் நம்பிக்கை அளிக்கின்றனர். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விஜயகுமார் வைசாக் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அவர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் தான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, பெரும்பாலான வீரர்கள் காயத்தால் அவதியடைந்து வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கான்வே, கெய்க்வாட், ரஹானே ஆகியோர் ஃபார்மில் உள்ளனர். ஆனால் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மொயீன் அலி போதிய பங்களிப்பை கொடுக்க தவறுகின்றனர். நிலையை உணர்ந்து அவர்கள் விளையாடினால் தான், பெங்களூரு அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.
அச்சுறுத்தும் காயம்: நடப்பு சீசன் தொடக்கத்திலேயே கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதை சமாளித்துக் கொண்டு 4 ஆட்டங்களில் அவர் பங்கேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் தோனி களம் இறக்கப்படவில்லை என்றால், அணிக்கு பெரும் பின்னடைவு தான்.