ஜெய்ப்பூர் : 16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூர் சாவாய் மன்சிங் மைதானத்தில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
யாஷ்வி ஹெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ராஜஸ்தான் அணியின் இன்னிங்சை தொடங்கினர். ஜாஸ் பட்லர் நிதானம் காட்டினாலும் மறுபுறம் யாஷ்வி அடித்து ஆடி அதிரடி காட்டினார். தொடக்க விக்கெட்டுக்கு இந்த ஜோடி 86 ரன்கள் குவித்தது. 27 ரன்கள் எடுத்த ஜாஸ் பட்லர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.
அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடியை 13வது ஓவரில் அடுத்தடுத்து துஷார் தேஷ்பாண்டே பிரித்தார். சஞ்சு சாம்சன் 17 ரன்கள் மட்டும் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அரை சதம் கடந்தும் அதிரடி காட்டி வந்த யாஷ்வி ஜெய்ஸ்வாலும் (77 ரன்) அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட்டாகினார்.
இறுதியில் களமிறங்கிய துருவ் ஜூரல் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தேவ்துத் படிகல் 27 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய கடினமான இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது.
ராஜஸ்தான் போன்று சென்னை அணியிலும் தொடக்க வீரர் டிவென் கான்வாய் பொறுமை காத்தாலும், ருத்ராஜ் ருத்தரதாண்டவம் ஆடத் தொடங்கினார். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய ருதுராஜ் இமாலய சிக்சர் அடித்தும் குழுமி இருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினார்.