தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்த முறையாவது கோப்பையை தனதாக்குமா ஆர்சிபி? - விராட் கோலி

நடுவரிசையில் பவர்-ஹிட்டிங் ஆட்டத்திற்கு மேக்ஸ்வெல் சிறந்த சாய்ஸ் என்றாலும், ஐபிஎல்லில் அவர் சோபிப்பாரா என்பது கேள்விக்குறியே.

Royal Challengers Bangalore, RCB , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , ஆர்சிபி
இந்த முறையாவது கோப்பையை தனதாக்குமா ஆர்சிபி

By

Published : Apr 5, 2021, 7:07 PM IST

புதுடெல்லி: ஐபிஎல் பட்டத்தை வென்றிராத மூன்று ஐபிஎல் அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் (ஆர்சிபி) ஒன்றாகும். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்றே ஆக வேண்டியக் கட்டாயத்திற்கு ஆர்சிபியின் கேப்டனும், இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி ஆளாகியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தான் ஆர்சிபி பிளே-ஆஃப் கட்டத்திற்கு தகுதிப் பெற்றது. கடந்த சில ஆண்டுகளில் ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் வரிசை எப்போதுமே நிலையற்றதாகவும், அவர்களின் பேட்டிங் சமீபத்திய ஆண்டுகளில் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஜோடியை மட்டுமே சார்ந்திருந்தது.

இருவரில் யார் ஒருவர் ஆட்டமிழந்தாலும், ஆட்டத்தை கையிலெடுக்கும் அளவிற்கான வீரர்கள் ஆர்சிபியில் இல்லை. இத்தொடரில் ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல், சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் 37 பந்துகளில் சதம் அடித்தவரான கேராளவைச் சேர்ந்த முகமது அசாருதீன், சச்சின் பேபி ஆகியோரைக் கொண்டு பேட்டிங்கின் வெற்றிடத்தை நிரப்ப அணி நிர்வாகம் முயற்சிக்கும்.

நடுவரிசையில் பவர்-ஹிட்டிங் ஆட்டத்திற்கு மேக்ஸ்வெல் சிறந்த சாய்ஸ் என்றாலும், ஐபிஎல்லில் அவர் சோபிப்பாரா என்பது கேள்விக்குறியே.

ஆர்சிபி வேகப்பந்துவீச்சின் நிலை

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமீசன், ஆஸ்., ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன், ஆஸ்., பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸ் ஆகியோர் அணியின் வேகவரிசைக்கு பலம் சேர்ப்பதற்காக பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரில் யாராவது ஒருவர் புதிய பந்தை கையாலும்போது, இறுதிக்கட்ட ஓவர்களில் பந்துவீச்சின் வேகத்தின் மாற்றம்செய்வதில் (PACE VARIATION) வல்லவர்களான கிறிஸ்டியனும் சாம்ஸும் அணிக்கு பெரும் பலமாக அமைவார்கள். மாற்று வீரராக கேன் ரிச்சர்ட்சனும் இருப்பது கூடுதல் பலம்.

ஆர்சிபியின் சுழல் இளவரசர்கள்

ஆர்சிபியின் சுழற்பந்துவீச்சு வரிசை என்றுமே எதிரணி வீரர்களை கலங்கவைக்கக் கூடியது. இந்திய அணியின் சர்வதேச சுழற்பந்துவீச்சாளர்களான யஷ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஆஸ்., வீரர் ஆடம் ஜாம்பா போன்றவர்களின் சுழல் தாக்குதல் மட்டுமே பெங்களூருக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

கோலி ஓப்பனிங்கில் இறங்குவதாக கூறியுள்ள நிலையில், மற்றொரு தொடக்க வீரரான தேவ்தத் படிக்கலுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடரின் முதல் போட்டியில் அவர் விளையாடாதது பெங்களூர் அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம். கடந்த ஐபிஎல் தொடரில் 473 ரன்களையும், நடந்து முடிந்த விஜய் ஹசாரா கோப்பையில் ஏழு போட்டிகளில் 737 ரன்களையும் படிக்கல் குவித்திருந்தார்.

"எங்களிடம் மாற்று வீரர்கள் உள்ளனர். வீரர்களின் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் விளையாடும் பாணியை மாற்ற விரும்புகிறோம். ஒரு மைதானத்தில் கட்டர்களை வீசும் பந்துவீச்சாளர்கள் தேவைப்படலாம், சில மைதானங்களில் பவுன்சர்கள் வீசும் பந்துவீச்சாளர்கள் தேவைப்படலாம். அதற்கேற்ப அணித் தேர்வினை மேற்கொள்வோம்" என்று பெங்களூரு அணியின் இயக்குநர் மைக் ஹெஸன் கூறியிருந்தார்.

ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளை விடவும் பலம் வாய்ந்து திகழ்ந்தாலும், கோப்பையை வெல்லும் அளவிற்கான ஒருங்கிணைந்த ஆட்டம் இதுவரை வெளிப்படவில்லை என்பதுதான் சோகம். இந்த ஆண்டாவது ஆர்சிபி கோப்பையை வென்று, விமர்சனங்களை தகர்த்தெறியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஃபின் ஆலன் (விக்கெட் கீப்பர்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), பவன் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், யஷ்வேந்திர சாஹல், ஆடம் ஜாம்பா, ஷாபாஸ் முகமது சிராஜ், நவ்தீப் சைனி, கேன் ரிச்சர்ட்சன், ஹர்ஷல் படேல், க்ளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ரஜத் பாட்டீதர், முகமது அசாருதீன், கைல் ஜேமீசன், டேனியல் கிறிஸ்டியன், சுயாஷ் பிரபுதேசாய், கே.எஸ் பாரத்.

அணி நிர்வாகத்தினர்: மைக் ஹெஸன், சைமன் கட்டிச் (தலைமை பயிற்சியாளர்), எஸ்.ஸ்ரீராம் (பேட்டிங், சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர்), ஆடம் கிரிஃபித் (வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர்), ஷங்கர் பாசு (உடற்தகுதி பயிற்சியாளர்), இவான் ஸ்பீச்லி (பிசியோதெரபிஸ்ட்), நவநிதா கவுதம் (விளையாட்டு மசாஜ் தெரபிஸ்ட்).

இதையும் படிங்க:பஹார் ஜமான் தவறவிட்ட இரட்டை சதம்; வென்றெடுத்த சாதனைகள்!

ABOUT THE AUTHOR

...view details