சென்னை:16வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. மே 23இல் நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணி 10வது முறையாக ஐபிஎல் வரலாற்றில் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
இதனையடுத்து நேற்று (மே 24) நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 2 பந்தில் இஷான் கிஷன் கொடுத்த கேட்சை குர்ணால் பாண்டியா தவற விட்டார். அதிரடியாக தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா (11) நவீன் உல் ஹக் பந்தில் பதோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பின்னர் இஷான் கிஷன், யாஷ் தாகூர் வீசிய பந்தில் நிகோலஸ் பூரணிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் - சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடியது. ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட்டுடன் 7 ஓவர்களுக்கு 70 ரன்கள் எடுத்தது. ஆனால், அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 33 ரன்கள் எடுத்திருந்தபோது, நவீன் உல் ஹக் வீசிய பந்தில் கௌதமிடம் பவுண்டரி அருகே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அடுத்ததாக கேமரூன் கிரீனும் நவீன் உல் ஹக் வீசிய அற்புதமான இன்ஸ்விங் பந்தில் போல்டாக மும்பை அணி 104 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. பின்னர் களமிறங்கிய திலக் வர்மா ஸ்விப் ஷாட் ஆடி சிக்ஸர் அடித்தார். பின்னர் நவீன் உல் ஹக் பந்திலும் சிக்ஸர் அடித்து அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். மறுமுனையில் பொறுமையாக ஆடிய டிம் டேவிட் 13 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மாவும் 26 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய வதேரா, யாஷ் தாகூர் வீசிய 20வது ஓவரை நாலாபக்கமும் பவுண்டரி சிக்ஸர்களாக சிதறடித்தார். ஓவரின் கடைசி பந்தில் வதேரா 23 ரன்னில் அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.