அகமதாபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெறவிருந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத வேண்டிய நிலையில், அகமதாபாத் நகரில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. டாஸ் கூட போட முடியாத அளவுக்கு, கனமழை வெளுத்து வாங்கியது. விட்டு விட்டு மழை பெய்ததால் மைதானம் முழுவதும் குளம் போல் காட்சியளித்தது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, ரிசர்வ் டே விதிப்படி இறுதிப்போட்டி இன்றைக்கு (மே 29) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்றும், அகமதாபாத் நகரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை நிலவரம்: அகமதாபாத்தில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
விதி சொல்வது என்ன?:ஒருவேளை இன்றும் மழை குறுக்கிட்டால், அதற்கேற்ப ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படலாம். இல்லையென்றால் 5 ஓவர் போட்டி நடத்தப்படும். அதன்பிறகும் மழை குறுக்கிட்டால் சூப்பர் ஓவர் போட்டி நடைபெறும். ஒரு பந்து கூட வீச முடியாத அளவுக்கு மழை பெய்தால், ஆட்டம் கைவிடப்பட்டு, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.