ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3) நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடைசியாக 2019ம் ஆண்டு மே 7ம் தேதி மும்பை அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய சிஎஸ்கே அணி, 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சொந்த மண்ணில் களம் இறங்குகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். மைதானம் முழுவதும் இன்று மஞ்சள் நிற மயமாக காட்சியளிக்க போவது நிச்சயம்.
கடந்த 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று சொந்த மண்ணில் களம் இறங்கும் அந்த அணி வெற்றிக் கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.
பலம், பலவீனம்: சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ருத்துராஜ் கெய்க்வாட் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். கடந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய அவர் 92 ரன்களை குவித்து, எதிரணி பந்துவீச்சாளர்களை மிரட்டினார். கான்வே, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ஷிவம் துபே, தோனி என சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், கணிசமான ரன்களை குவித்தால் மட்டுமே லக்னோ அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
சென்னை சேப்பாக்கம் மைதானம் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். குஜராத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர் துசார் தேஸ்பாண்டே தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம். சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால், சென்னை அணியில் இடம்பிடித்துள்ள தென்னாப்பிரிக்க வீரர் சிசான்டா மகாலா இன்றைய ஆட்டத்தில் களம் இறங்க மாட்டார். இதேபோல் இலங்கை வீரர்கள் மகீஷ் தீக்சனா, மதீஷா பதிராணா ஆகியோர் முதல் 3 ஆட்டங்களில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டும் லக்னோ: இந்நிலையில், இளம் வீரர்களை கொண்ட லக்னோ அணி பலம் வாய்ந்த அணியாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஸ்டொய்னிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்களுக்கு, மார்க் வுட் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டான் டி காக், நெதர்லாந்து அணியுடனான ஒருநாள் தொடரை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்ட நிலையில், அவர் இன்றைய போட்டியில் களம் இறங்க வாய்ப்பில்லை.