சென்னை: ஐபிஎல் 2023 போட்டியின் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது.
இதில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்களை சன் ரைசர்ஸ் அணி எடுத்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 34 மற்றும் திரிபாதி 21 ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதேநேரம், மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து 135 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4வது ஓவரில் 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் டீவன் கான்வாய் அரைசதம் கடந்து 77 ரன்கள் எடுத்து ஆட்டமே இழக்காமல் அணிக்கு வலு சேர்த்தார். அதேநேரம், ருத்துராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானே மற்றும் அம்பத்தி ராயுடு ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதேபோல், ஹைதராபாத் அணியின் மார்கண்டே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.