மும்பை:ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தொடரின் 47ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று (மே 2) ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கேட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸை இழந்த ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
கேப்டன் சாம்சன் அரைசதம் கடந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. கொல்கத்தா பந்துவீச்சில் டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும், உமேஷ், அன்குல் ராய், சிவம் மாவி ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 153 என்ற சுமாரான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா பேட்டர்கள் மிகவும் பொறுமையாக விளையாடினர். ஃபின்ச், பாபா இந்திரஜித் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளிக்க தவறினாலும், அடுத்த வந்த கேப்டன் ஷ்ரேயஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவரும் 34 (32) ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா 12.5 ஓவரில் 92/3 என்ற நிலையில் இருந்தது. ஒருமுனையில், நிதீஷ் ராணா வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக விளையாட, புதிதாக களம்கண்ட ரிங்கு சிங் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடத் தொடங்கினார். இதனால், கடைசி 2 ஓவர்களுக்கு கேகேஆர் அணிக்கு 18 ரன்களை தேவைப்பட்டன. அதுவரை 3 ஓவர்களுக்கு 20 ரன்களை மட்டும் கொடுத்திருந்த பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரை வீச வந்தார். ஸ்ட்ரைக்கில் ரிங்கு இருந்தார்.