சென்னை: ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதல் பேட்டிங் செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 78, ஏபி டிவில்லியர்ஸ் 76 ரன்களை எடுத்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்க பேட்டர்கள் ராணா, கில் நிதானதமான தொடக்கத்தை அளித்தனர்.
கைல் ஜேமீன்சன் வீசிய இரண்டாவது ஓவரில் கில் 21 (9) ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவருக்கு பின், திரிபாதி 25 (20) ரன்களிலும், ராணா 18 (11) ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 2(5) ரன்களிலும் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
சிறிதுநேரம் தாக்குப்பிடித்த கேப்டன் மோர்கன் ஹர்ஷல் பட்டேலிடம் 29 (23) ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதன்பின் ரஸ்ஸல் களமிறங்கினார். கடைசி 5 ஓவர்களில் 84 ரன்கள் தேவைப்பட்டது.
சாஹல் வீசிய 17ஆவது ஓவரில் 16 ரன்கள் குவித்த ரஸ்ஸல், தனது அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் ஷகிப் அல் ஹாசன், பாட் கம்மின்ஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை ஜேமீன்சன் வீழ்த்தி ரஸ்ஸலை நிராயுதபாணியாக்கினார்.
ஆட்டத்தை தலைகீழாக மாற்றக்கூடிய 19ஆவது ஓவரை வீச வந்தார் சிராஜ். பேட்டிங் கிரீஸில் ரஸ்ஸல். சிராஜ், ரஸ்ஸலுக்கு எப்படி டெலிவரி அளிக்க போகிறார் என்ற அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். சிராஜ் வீசிய முதல் மூன்று பந்துகளும் அவுட்சைட் ஆஃப் லைனில் வீசினாலும், ஒவ்வொரு பந்தின் லெந்தையும் மாற்றிக் கொண்டே இருந்தார். இந்த மூன்று பந்துகளிலும் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. நான்காவது பந்தை துல்லியமான யார்க்கர் லெந்தில் வீசி ரஸ்ஸலை வென்றுவிட்டார் சிராஜ். கடைசி பந்தில் தான் ஒரு ஒரு ரன் அடித்தார் ரஸ்ஸல்.