சார்ஜா: ஐபிஎல் 2021 தொடரின் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 56 (44), வெங்கடேஷ் ஐயர் 38 (35) ரன்களைச் சேர்த்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்குத் தொடக்கம் மோசமாக இருந்தது. ஜெய்ஸ்வால், லீவிஸ், சாம்சன் எனச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர், அறிமுக வீரர் அனுஜ் ராவத், பிலிப்பிஸ், துபே, மோரிஸ் என அடுத்தடுத்து வெளியேற 35 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. அந்த நேரத்தில், திவாத்தியா சற்று அதிரடி காட்டினார். ஜெய்தேவ் உனத்கட், சக்காரியா ஆட்டமிழக்க, மறுபுறம் கொல்கத்தா அணி வெற்றியையும் நெருங்கியது.
இறுதியாக, திவாத்தியா 44 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி, 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம் கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பெங்களூரு-டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு போட்டிகளும் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL 2021: சிஎஸ்கேவை சுளுக்கெடுத்த ராகுல்; வெற்றியுடன் வெளியேறியது பஞ்சாப்