அபுதாபி:கரோனா காரணமாகப் பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.
இந்நிலையில், 47ஆவது லீக் ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிவருகிறது.
நிதான தொடக்கம்
அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, சென்னை அணிக்கு ருதுராஜ், டூ ப்ளேசிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பவர்பிளேயில் இந்த இணை 46 ரன்களை குவித்தது.
பவர்பிளேயின் அடுத்த ஓவரில், டூ பிளேசிஸ் 25 (19) ரன்களிலும், அடுத்து வந்த ரெய்னா 3 (5) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொயின் அலி, ருதுராஜ் உடன் இணைந்து ஸ்கோரை சீராக உயர்த்தினார். ருதுராஜ் தான் சந்தித்த 43ஆவது பந்தில் அரைசதத்தைப் பதிவு செய்தார்.
ருதுராஜ் - ஜடேஜா
பின்னர், திவாத்தியா வீசிய 15ஆவது ஓவரில் மொயின் அலி 21 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். ராயுடு 2 (4) ரன்களில் சக்காரியாவிடம் வீழ்ந்தார். இதனையடுத்து, களத்திற்கு வந்த ஜடேஜா, ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். கடைசி ஓவரில் முதல் நான்கு பந்துகளை ஜடேஜா எதிர்கொண்டு 15 ரன்களை குவித்தார்.
ருதுராஜ் சதமடிக்க ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார். இதன்மூலம், சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 101 (60) ரன்களுடனும், ஜடேஜா 32 (15) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த ஜோடி கடைசி 22 பந்துகளில் 55 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் பந்துவீச்சில் திவேத்தியா 3 விக்கெட்டுகளையும், சக்காரியா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 190 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 ஓவர்கள் முடிவில் 81/1 என்ற நிலையில் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அதிரடி காட்டினார்.
இதையும் படிங்க: IPL 2021: மும்பையை முடக்கி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி