துபாய்: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம்கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 33ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நேற்று (செப். 22) மோதியது.
ஹைதராபாத் அப்செட்
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக அப்துல் சமத் 28 ரன்களையும், ரஷித் கான் 22 ரன்களையும் எடுத்தனர்.
டெல்லி பந்துவீச்சு தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், நோர்க்கியா, ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆரம்பம் முதல் அதிரடி
136 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய டெல்லி அணிக்கு, தவான், பிருத்வி ஷா ஜோடி சற்று நல்ல தொடக்கத்தை அளித்தது. கலீல் அகமது வீசிய மூன்றாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த பிருத்வி ஷா, அதே ஓவரில் கேன் வில்லியம்சனின் அற்புதமான கேட்ச்சால், தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அதன்பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் உடன் இணைந்து ஹைதராபாத்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக, எகனாமிக் ஸ்பின்னர் என அழைக்கப்படும் ரஷித் கானின் முதல் இரண்டு ஓவர்களில் மட்டும் 19 ரன்களை இந்த ஜோடி குவித்தது.
இருப்பினும், ரஷித் கான் வீசிய 11ஆவது ஓவரில் தவான், அப்துல் சமத் இடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். தவான் சந்தித்த 37 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சர் என 42 ரன்களை எடுத்தார். தவான் - ஸ்ரேயஸ் ஜோடி இரண்டாம் விக்கெட் பாட்னர்ஷிப்பாக 53 ரன்களைக் குவித்தது.
பின்னர், ஸ்ரேயாஸ் ஐயருடன் கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் டெல்லி அணியை வெற்றியை நோக்கி சீரான வேகத்தில் நகர்த்திச் சென்றனர். இதனால், 15 ஓவர்களில் டெல்லி அணி 99 ரன்களை எடுக்க, கடைசி 30 பந்துகளுக்கு 37 ரன்கள் தேவைப்பட்டன.
அப்போது வேகமெடுத்த இந்த ஜோடி, 17.5 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தனர். வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டபோது, ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்சர் அடிக்க, டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. ஸ்ரேயாஸ் ஐயர் 47 (41), ரிஷப் பந்த் 35 (21) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக நோர்க்கியா தேர்வுசெய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் சென்னை அணியைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இன்று (செப். 23) அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதையும் படிங்க:எனக்கு சர்ப்ரைஸாக இல்லை - நடராஜன் ஓபன் டாக்