துபாய்: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.
பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் நேற்று முன்தினம் (செப். 19) தொடங்கின.
தெறிக்கவிட்ட தொடக்கம்
இந்நிலையில், 32ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று (செப். 21) மோதுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, எவின் லீவிஸ், ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
முதல் மூன்று ஓவர்களில் 23 ரன்கள் சேர்த்திருந்த இந்த இணை, இஷான் போரெல் வீசிய நான்காவது ஓவரில் 17 ரன்களையும், தீபக் ஹூடா ஐந்தாவது ஓவரில் 13 ரன்கள் என அடுத்த இரண்டு ஓவர்களில் மட்டும் 30 ரன்களை குவித்து அசத்தியது.
பவர்பிளேவின் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் லீவிஸ் மயாங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். லீவிஸ் தான் சந்திருந்த 21 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 36 ரன்களை எடுத்தார்.
மிரட்டிய மிடில்-ஆர்டர்
இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் சாம்சன் 4 (5) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின், களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டனும் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 25 ரன்களை சேர்த்து நடையைக் கட்டினார்.
ஜெய்ஸ்வால் உடன் லோம்ரோர் ஜோடி சேர்ந்தார். அடில் ரஷித்தின் 14ஆவது ஓவரில், லோம்ரோர் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 49 (34) ரன்களில் துரதிருஷ்டவசமாக மயாங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, தீபக் ஹூடா வீசிய 16ஆவது ஓவரில் லோம்ரோர் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் உள்பட 24 ரன்களை குவித்து மிரட்டினார்.
கடைசியில் சொதப்பல்
அப்போது, ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், கடைசிக் கட்ட ஓவர்களில் ரியான் பராக் 4 (5), லோம்ரோர் 43 (17), திவாத்தியா 2 (5), மோரிஸ் 5 (5), சேதன் சக்காரியா 7 (6), கார்த்திக் தியாகி 1 (3) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதனால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களை எடுத்தது. இறுதி நான்கு ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 21 ரன்களை மட்டும் சேர்த்தது.
பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷான் போரெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: பெங்களூரு தீ விபத்து: பதைபதைக்க வைக்கும் காணொலி!