துபாய்:ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது.
இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இந்த இரண்டாம் கட்டப் போட்டிகள் நேற்று முன்தினம் (செப். 19) தொடங்கின.
இளம் வீரர்கள் அசத்தல்
தொடரின் 32ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேற்று (செப். 21) எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 49, லோம்ரோர் 43, எவின் லீவிஸ் 36 ரன்களையும் எடுத்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ராகுல் 3000
சற்று கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு, கேப்டன் கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால் மாஸான தொடக்கத்தை அளித்தனர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை எடுத்திருந்தது.
கேப்டன் ராகுல் 25 ரன்கள் கடந்தபோது, ஐபிஎல் போட்டியில் தனது 3,000 ரன்களை (80 இன்னிங்ஸ்) கடந்தார். பவர்பிளே ஓவர்களில் ராகுல் மூன்று முறை ராஜஸ்தான் வீரர்களுக்கு கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார். எவின் லீவிஸ், ரியான் பராக், திவாத்தியா ஆகியோர் அடுத்தடுத்து ராகுல் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டனர்.
அதன்பின்னர், மயாங்க் அகர்வால், ராகுலுடன் இணைந்து அதிரடியில் இறங்க ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால், 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 106 ரன்களை எடுத்தது.
அரை சதத்தை நோக்கி முன்னேறிய ராகுல் 12ஆவது ஓவரில் சக்கரியாவின் பந்துவீச்சில் ஆட்மிழந்தார். ராகுல் தான் சந்தித்த 33 பந்துகளில் நான்கு பவுண்டரி, 2 சிக்ஸர் என 49 ரன்களை அடித்தார். இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் கே.எல். ராகுல் முதலிடத்தில் உள்ளார்.