சென்னை:41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 28, மொயீன் அலி 10, ஜடேஜா 12 ரன்களில் வெளியேறினர்.
எனினும் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் கான்வே அரைசதம் விளாசி அசத்தினார். கடைசி ஓவரில் களம் இறங்கிய கேப்டன் தோனி, கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. கான்வே 92 ரன்களுடனும், தோனி 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ராகுல் சாஹர், சிக்கந்தர் ராசா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
201 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங், கேப்டன் தவான் நல்ல தொடக்கம் தந்தனர். தவான் 28 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக விளையாடி பிரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தைடே 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் களம் இறங்கிய லிவிங்ஸ்டோன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதில் பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
சாம் கரன் 29, ஜிதேஷ் சர்மா 21 ரன்கள் எடுத்து வெளியேறினர். கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மதீஷா பதிரானா வீசினார். கடைசி பந்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ரசிகர்கள் பலர் இருக்கையின் நுனிக்கே வந்தனர். இந்நிலையில் கடைசி பந்தில் சிக்கந்தர் ராசா 3 ரன்களை எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே 3, ஜடேஜா 2, பதிரானா ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது சென்னை வீரர் கான்வேக்கு வழங்கப்பட்டது.