தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 CSK vs RCB: ஆர்சிபியை சம்பவம் செய்த சிஎஸ்கே! - CHENNAI SUPER KINGS

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தனது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

CHENNAI SUPER KINGS  ROYAL CHALLENGERS BANGALORE
csk vs rcb match result

By

Published : Apr 25, 2021, 7:45 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ். தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சென்னையின் சீற்றம்

அதன்படி களமிறங்கிய டூ பிளேசிஸ், ருத்ராஜ் ஆகியோர் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி பவர்பிளேயில் 51 ரன்கள் எடுத்து அசத்தியது.

சென்னை அணியின் ஸ்கோர் 74-0 ஆக இருந்தபோது, ருத்ராஜ் 33(25) ரன்களில் சாஹல் சுழலில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறங்கிய ரெய்னா 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 24(18) ரன்களிலும், டூ பிளேசிஸ் 50(41) ரன்களிலும் ஹர்ஷல் பட்டேல் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சிறிதுநேரம் தாக்குபிடித்த ராயுடு 14(7) ரன்களில் வெளியேற, கேப்டன் தோனி களமிறங்கினார்.

19ஆவது ஓவரில் சிராஜ் கட்டுக்கோப்பாக பந்துவீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அப்போது சென்னை அணி 154 ரன்களையே எடுத்திருந்தது.

கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் விளாசிய ஜடேஜா அசத்தினார். அடுத்த பந்தை நோ-பாலாக ஹர்ஷல் வீச அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸர் பறக்கவிட்டார் ஜடேஜா ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரைசத்தைப் பதிவுச் செய்தார். ஐந்தாம், ஆறாம் பந்தில் முறை சிக்ஸர், பவுண்டரி அடிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை குவித்துள்ளது.

கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 37 ரன்களை எடுத்து 62(28) ரன்களிலும், தோனி 2(3) ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில் ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

படிக்கலின் அதிரடி தொடக்கம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 192 என்ற சற்றே கடினமான இலக்கை துரத்த, கோலி - படிக்கல் இணை களம்கண்டது. தீபக் சஹார், சாம் கரன் வீசிய முதல் மூன்று ஓவர்களில் 44 ரன்கள் எடுத்து மிரட்டியது இந்த இணை. அதில் தேவ்தத் படிக்கல் மட்டும் 32 ரன்களை சேர்த்தார்.

சிஎஸ்கேவின் எழுச்சி

சாம் கரன் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில் கோலி தோனியிடம் கேட்ச் கொடுத்து, 8(7) ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து படிக்கலும் 34(15) ரன்களில் தாக்கூரிடம் வீழ்ந்தார்.

சுழலிலும் மிரட்டிய ஜடேஜா

ஏழாவது, ஒன்பதாவது, பதினொறாவது ஓவர்களை வீசிய ஜடேஜாவிடம் வாஷிங்டன் சுந்தர் 7(11), மேக்ஸ்வெல் 22(15, டி வில்லியர்ஸ் 4(9) ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால்ஆர்சிபியின் தோல்வி உறுதியானது.

இதன் நடுவே ஒன்பதாவது ஓவரில் ஜடேஜாவின் வெறித்தனமான த்ரோவால் டான் கிறிஸ்டியன் பரிதாபமாக ரன் அவுட்டானார்.

தாஹிரின் தாக்குதல்

இம்ரான் தாஹிரும் தனது பங்கிற்கு ஹர்ஷல் பட்டேல், சைனி ஆகியோரை போல்டாக்கி அசத்தினார். மேலும், ஜேமின்சனை டைரக்ட் ஹிட் மூலம் வெளியேற்றினார் தாஹிர்.

44 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த பெங்களூரு 103 ரன்களில் ஒன்பதாவது விக்கெட்டை இழந்தது. அதன்பின் சாஹல் - சிராஜ் ஜோடி கடைசிவரை தங்களது விக்கெட்டை இழக்காமல் போராடியது.

ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சென்னை அணியில் ஜடேஜா 3 விக்கெட்டையும், தாஹிர் 2 விக்கெட்டையும், சாம் கரன், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். பெங்களூரு தரப்பில் சாஹல் 8(21) ரன்களோடும், சிராஜ் 12(14) ரன்களோடும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பேட்டிங்கில் அசத்தலான அரைசதத்தையும், பவுலிங்கிலும் 3 விக்கெட்கள், ஒரு ரன்அவுட் என பெங்களூரை வாரி சுருட்டிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூருவை வீழ்த்தி, சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details