மும்பை:ஐபிஎல் 2022 தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இன்று (ஏப். 12) மாகாராஷ்டிராவின் டிஒய் பாட்டீல் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை அணி நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மறுப்புறம் பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றிக்கண்டுள்ளது.
ஆகவே, பிளே ஆப் போட்டிக்குள் நுழைய சென்னை அணி இனிவரும் போட்டிகளில் போராடி வெற்றி பெற வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட சூழலில், சென்னை அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் பயிற்சியில் இருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவரின் விலகல் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹர் ரூ.14 கோடிக்கு எடுக்கப்பட்டார். இது சென்னை அணியின் அதிகபட்ச விலையாகும். முன்னதாக தீபக் பிப்ரவரியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியின் போது காயம் ஏற்பட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:SRH vs GT: குஜராத் அணியின் முதல் தோல்வி; முன்னேற்றம் காணும் எஸ்ஆர்ஹெச்!