டெல்லி: 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இந்தாண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் சம அளவிலான வீரர்கள் இடம்பெறுவதற்காக இந்த ஏலம் நடத்தப்படுகிறது.
ரூ. 90 கோடி அனுமதி
ஐபிஎல் மெகா ஏலம் வரும் 12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 2 கோடி வரை அடிப்படை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சீசனில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத், லக்னோ உள்பட மொத்த 10 அணிகளும், தற்போதைய அணி வீரர்களில் 3 அல்லது 4 வீரர்களைத் தக்கவைத்துள்ளது.
அணி கட்டமைப்பிற்குத் தேவைப்படும் வீரர்களை அணி நிர்வாகம் இந்த ஏலத்திலிருந்து தேர்வுசெய்யும். 10 அணிகளுக்கும் தலா ரூ. 90 கோடி ஒதுக்கப்பட்டது.
பஞ்சாப் முன்னணி
இதில், பஞ்சாப் வெறும் ரூ. 18 கோடியில் இரண்டு வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு ரூ. 72 கோடியை இருப்பில் வைத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியே, அதிக தொகையுடன் இந்த மெகா ஏலத்தை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், மெகா ஏலத்தில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், 19 வயதுக்குள்பட்ட வீரர்கள் ஆகியோர் அடங்கிய முழுப் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் நேற்று (பிப்ரவரி 1) வெளியிட்டுள்ளது.
சர்வதேச போட்டிகளில் விளையாடிய 228 வீரர்களும் (Capped Players), சர்வதேச போட்டிகளில் விளையாடாத 355 வீரர்களும் (Uncapped Players) என மொத்தம் 590 பேர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
2 கோடி ரூபாய் லிஸ்ட்
ஏலத்தின் அதிகபட்ச அடிப்படை தொகையான ரூ. 2 கோடி ரூபாயில் 48 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அடுத்ததாக, ரூ. 1.5 கோடிக்கு 20 வீரர்களும், ரூ. 1 கோடிக்கு 34 வீரர்களும் பதிவுசெய்துள்ளனர்.
ஸ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷான் கிஷன், அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சஹார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகிய முன்னணி இந்திய வீரர்கள் ரூ. 2 கோடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், இந்திய வீரர்கள் மட்டுமில்லாது ஃபாஃப் டூ பிளேசிஸ், டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, டிரன்ட் போல்ட், குவின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ஹோல்டர், டுவைன் பிராவோ, ஷகிப் அல் ஹாசன் ஆகியோரும் தங்களின் அடிப்படைதொகையை ரூ. 2 கோடியாக அறிவித்துள்ளனர்.
தற்போது, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இளம் வீரர்களும் இந்த ஏலத்தில் சிறந்த தொகைக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Australian Open 2022: ஸ்பெயின் காளையிடம் சிக்கிய ரஷ்ய கன்றுக்குட்டி.. 21 கிராண்ஸ்ட்லாம் வென்று ரபேல் நடால் உலக சாதனை!