தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"நான் கனவில் கூட நினைக்கவில்லை" - ஐபிஎல் ஏலம் குறித்து மிட்செல் ஸ்டார்க் நெகிழ்ச்சி..!

2024 ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட நிலையில், மிட்செல் ஸ்டார்க் ஜியோ சினிமாவில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Mitchell Starc
Mitchell Starc

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 11:06 PM IST

துபாய்: அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (டிச.19) இத்தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபல வனிக வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மினி ஏலம், ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்றது. வெளிநாட்டு வீரர்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் நல்ல ஏலத் தொகைக்கு வாங்கப்பட்டனர்.

அதில் முதலில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரும், கேப்டனுமான பேட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். அந்த சூழலில் அவர் தான் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு சென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஆனால் அதன்பின் அதே அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸின் சாதனையை தகர்த்தெரிந்தார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத் தொகைக்கு போன வீரரானார்.

இவரை டெல்லி கேபிடல்ஸ் அணி கைப்பற்ற கொல்கத்தா அணியுடன் சண்டையிட்டது. இருப்பினும் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் கொல்கத்தா அணி மிட்செல் ஸ்டார்க்கை யாரும் நினைத்து பார்க்காத விலைக்கு வாங்கினர்.

இந்த நிலையில், கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்டதை குறித்து மிட்செல் ஸ்டார்க் ஜியோ சினிமாவில் பேசியுள்ளார். அதில் "நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஐபிஎல் ஏலப் பட்டியலில் பல திறமை வாய்ந்த வீரர்களின் பெயர்கள் உள்ளது.

அவர்களில் பேட் கம்மின்ஸும் ஒருவர். அவர் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு செல்கிறார். நான் எந்த அணிக்கு செல்வேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது கொல்கத்தா அணியில் ஒரு பகுதியாக இருப்பதில் மிகிழ்ச்சி அடைகிறேன். இந்த அணியில் பேட் கம்மின்ஸ் இருந்தார். அந்த இடத்தை என்னால் நிரப்ப முடியும் என நம்புகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்; "நான் எனது நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட நினைத்தேன். மேலும், டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த நினைத்தேன். கடந்த சில ஆண்டுகளாக அதுவே எனது சிந்தனையாக இருந்தது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வருகிறது. அதனால் அதற்கு முன்னதாக ஐபிஎல் சீசனில் விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கும்" என கூறினார்.

மிட்செல் ஸ்டார்க் கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர், 34 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மேலும், 2012ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 58 போட்டிகளில் 73 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெங்களூரு அணியில் இருந்த ஹர்ஷல் படேலை ரூ.11.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப் அணி!

ABOUT THE AUTHOR

...view details