ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா மீண்டும் இந்தப் போட்டியில் களமிறங்கினார். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை சேர்த்தது.
தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்காக கேப்டன் வார்னர் - சஹா இணை களமிறங்கியது. இந்த இணை முதல் ஓவர் மட்டுமே அடக்கி வாசித்தது. இரண்டாவது ஓவரில் கவுல்டர் நைல் வீசிய மூன்றாவது பந்தில் சிக்சர், பவுண்டரி என தொடர்ந்து அடித்த சஹா, அதன் பின்னர் திரும்பிப் பார்க்கவே இல்லை. தொடர்ந்து மூன்றாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை சஹா விரட்ட, பதிலுக்கு கேப்டன் வார்னர் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ஆட்டத்திற்குள் வந்தார்.
ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என இருவரும் சத்தியம் செய்து வந்துவிட்டார்களோ என்னவோ, பவர் ப்ளேவின் அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகள் வரிசைக்கட்டின. பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது ஹைதராபாத்.