2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பின்னர் டெல்லி அணிக்காக ஸ்டோய்னிஸ் - தவான் இணை தொடக்கம் கொடுத்தது. இந்தப் போட்டிக்கு முன்பாக டெல்லி அணியின் ஹல்க், துப்பாக்கி, புல்லட் என ஸ்டோய்னிஸ் பற்றி அனைவரும் பேசிவந்தனர். இதற்கேற்ப ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டெல்லி அணிக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைய, தொடர்ந்து வந்த ரஹானே, 2 ரன்களில் போல்ட் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இதன்பின் தொடக்க வீரர் தவான் நன்றாக ஆடிவந்த நிலையில், ஜெயந்த் யாதவ் பந்தில் அவரும் 15 ரன்களில் போல்டாக டெல்லி அணியின் நிலை பரிதாபமானது. டாஸ் போடும்போது டெல்லி அணியில் அதிக அளவிலான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஜெயந்த் யாதவ் அணியில் இடம்பிடித்தார் என்று ரோஹித் கூறியிருந்தார். அதற்கேற்ப அவரும் தவானின் விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கையைக் காப்பாற்றினார்.
பின்னர் இணைந்த ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் கூட்டணி நிதானமாக ஆடியது. எவ்வித தேவையில்லாத ஷாட்களையும் ஆடாமல், டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டைம் அவுட் முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், குர்ணால் பாண்டியா வீசிய ஓவரில் ரிஷப் பண்ட் இரண்டு சிக்சர்களை அடித்து டெல்லி அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் இழுத்துவந்தார். அங்கிருந்து டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.