கரோனா வைரஸ் பரவல், வெளிநாட்டில் போட்டிகள் என பல இன்னல்களைத் தாண்டி ஐபிஎல் திருவிழாவின் 13ஆவது சீசன் இன்று (செப்.19) கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல்முறையாக பார்வையாளர்களின்றி நடைபெறும் இத்தொடரில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஈர்க்கும் வண்ணமாக முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு கிடைக்குமோ அதேபோன்று, சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் எதிர்பார்ப்பு அமைந்திருக்கும். அதிலும், கடந்தாண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடன் தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி, ஐபிஎல் தொடரின் வரலாற்றில் அதிகமுறை கோப்பையை கைப்பற்றிய அணி என்ற சாதனையையும் படைத்தது.
இதற்கிடையில் இந்தண்டு மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு, தொடரில் பங்கேற்கும் வீரர்கள், அணி ஊழியர்கள் என அனைவரும் கடும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அதிலும் சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
கடந்தாண்டு(2019) இறுதிப்போட்டி வரை முன்னேறிய சென்னை அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை நழுவவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதுமட்டுமில்லாமல், உலகக்கோப்பை தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஒதுங்கியிருந்த மகேந்திர சிங் தோனி, ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
அதிலிருந்து மீள்வதற்குள்ளாகவே சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இருப்பினும் இவர்கள் சென்னை அணிக்காக விளையாட உள்ளதை எண்ணி ரசிகர்கள் ஆரவாரத்தில் திளைத்திருந்தனர். பின்னர் சிஎஸ்கே அணியும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றது. அங்குதான் அவர்களுக்கு புதிது புதிதாக சிக்கல் உருவாகத் தொடங்கியது.
வீரர்களுக்கு கரோனா தொற்று, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் தொடரிலிருந்து விலகல் என சிக்கலுக்குள் சிக்கியது சென்னை அணி. சிஎஸ்கே சிக்கல்களை சந்திப்பது இது புதியதா என்ன.
அனைத்து சிக்கல்களையும் உடைத்தெறிந்து இன்று தனது பரம எதிரியுடனான ஆட்டத்தை விளையாட சிஎஸ்கே அணி காத்துக் கொண்டிருக்கிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, வாட்சன், டூ பிளேசிஸ், முரளி விஜய், ராயுடு, ஜடேஜா என அதிரடி வீரர்களுடன் தங்களது முதல் போட்டியை எதிர்நோக்கியுள்ளது.
அதேபோல் பந்து வீச்சில் இங்கிடி, ஹசில்வுட், சஹர், தாக்கூர் என வரிசைக்கட்டிக் கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.