ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று (அக்.28) நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளதால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்காக இரு அணிகளும் போராடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் ஏழு வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும் 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பாண்டியா சகோதரர்கள், பொல்லார்ட், பும்ரா, போல்ட் என நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், மும்பை அணி தனது ஐந்தாவது ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
மேலும் கடந்த சில போட்டிகளாக அணியில் இடம்பெறாமலிருந்த கேப்டன் ரோஹித் சர்மா இன்றையப் போட்டியில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் ஹிட்மேனின் வருகையை எண்ணி மும்பை அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நடப்பு ஐபிஎல் சீசனில் ஏழு வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும் 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.