ஐபிஎல் தொடரில் நேற்று (அக். 03) நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி களமிறங்கிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா சிறப்பாக விளையாடி அரைசதமடித்து அசத்தினார்.
பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி, ஐபிஎல் தொடரில் தனது 14ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் இணைந்த ரிஷப் பந்தும் எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்குப் பறக்கவிட்டார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களையும், ப்ரித்வி ஷா 66 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் சுனில் நரேன் இன்னிங்சின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - நிதீஷ் ராணா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் 28 ரன்கள் எடுத்திருந்த கில், ஆட்டமிழந்து வெளியேற மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த நிதீஷ் ராணாவும் அரைசதமடித்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் வழக்கம்போல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மோர்கன் - திரிபாதி அதிரடியாக விளையாடினர்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.