தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சதத்தை தவறவிட்ட விரக்தி: பேட்டை தூக்கி எறிந்த கெயிலுக்கு அபராதம்! - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

அபுதாபி: இந்திய பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) நடத்தை விதிகளை மீறியதற்காக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சதம் தவறவிட்ட விரக்தியில் பேட்டை தூக்கிய எரிந்த கெயில்: ஆபராதம் விதித்த நிர்வாகம்
சதம் தவறவிட்ட விரக்தியில் பேட்டை தூக்கிய எரிந்த கெயில்: ஆபராதம் விதித்த நிர்வாகம்

By

Published : Oct 31, 2020, 4:54 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50ஆவது லீக் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில், கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணியின் தொடக்க வீரர் மன்தீப்சிங் ரன் ஏதும் எடுக்காமலேயே முதல் ஒவரில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, மூன்றாவது வீரராக களம் இறங்கிய கிறிஸ் கெயில், கே.எல். ராகுலுடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பந்துவீச்சாளர்களைத் திணறடித்துவந்த கிறிஸ் கெயில் டி-20 போட்டிகளில் 1000 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதனைத்தொடர்ந்து சதம் அடித்து மற்றொரு சாதனையைப் படைப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் 99 ரன்களில் போல்ட் ஆனார்.

இதனால், கிறிஸ் கெயிலின் சதம் ஒரு ரன்னில் கைக்கூடாமல் போனது. இதனால் விரக்தியடைந்த கெயில் தனது பேட்டை தூக்கி வீசி தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

கெயிலின் இந்தச் செயல் ஐபிஎல்லின் நடத்தை விதிகளின் நிலை-1 குற்றம் 2.2 -வை மீறியதாக இருப்பதால், அவரது போட்டி ஊதியத்தில் 10 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது தவறை கிறிஸ் கெயில் ஒப்புக்கொண்டு, அதற்கான அபராதத்தை ஏற்றுக்கொண்டார். ஐபிஎல் விதிகளின்படி "நடத்தை விதிகளின் நிலை 1 மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது”.

நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. தற்போது புள்ளிகள் அட்டவணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள ராயல்ஸ் அணி, அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் (கே.கே.ஆர்) நாளை மோதுகிறது.

புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி நாளை அபுதாபியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்று அதிக நெட் ரன் ரேட் வைத்திருக்கும்பட்சத்தில் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்புள்ளது.

ABOUT THE AUTHOR

...view details