2019 ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 23ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் ஆரம்பித்த சில தினங்களிலே ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் செய்த 'மன்கட் விக்கெட்' முறை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியுற்றிருந்ததால் நேற்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் களமிறங்கினர்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை எகிறச் செய்தனர். இறுதிகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவும் தன் பங்கிற்கு 14 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணியின் கேப்டன் கோலி 46 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் இறுதிகட்டத்தில் பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி பெங்களூரு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
ஒரு கட்டத்தில் அந்த அந்த அணியின் வெற்றிக்கு இறுதி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிக்சர் அடித்து டிரா செய்தால் மேட்ச் சூப்பர் ஓவர் சென்றிருக்க கூடும். ஆனால் மலிங்கா வீசிய கடைசி பந்தை துபே எதிர்கொண்டபோது அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. இதனால் மும்பை அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.